பால் வீதி

பால் வீதி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். புவியில் இருந்து தென்படும் இதன் தோற்றம் காரணமாக பால் என்ற பெயரடை ஏற்பட்டது. அதாவது, வெற்றுக் கண்ணால் பார்க்கும்போது அவற்றில் இருக்கும் விண்மீன்களை தனித்தனியாக வேறுபடுத்திக் காண இயலாது என்பதால் அது இரவு வானில் ஒரு வெண் ஒளிர் பட்டை போன்று தோற்றமளிக்கும். கலீலியோ கலிலி 1610 ஆம் ஆண்டில் தன் தொலைநோக்கியைக் கொண்டு அந்த ஒளிர் பட்டையை தனித்தனி விண்மீன்களாகப் பிரித்து நோக்கினார். 1920ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான வானியலாளர்கள் பால் வழியில் அண்டத்தின் அனைத்து விண்மீன்களும் அடங்கியுள்ளதாகக் கருதி வந்தனர்.[17] 1920ஆம் ஆண்டு ஆர்லோவ் சேப்ளே மற்றும் ஏபெர் கர்டிசு ஆகிய இரு வானியலாளர்கள் இடையே நடந்த பெருவிவாதத்தைத் தொடர்ந்து[18] எட்வின் ஹபிள் என்பவரின் நோக்கீடுகள் பால் வீதி என்பது அண்டத்தில் உள்ள பல பேரடைகளில் ஒன்றே என்று காண்பித்தது..

பால் வீதி என்பது 150,000 முதல் 200,000 ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட ஒரு பட்டைச் சுருள் பேரடையாகும்.[19][20] இது 100–400 பில்லியன் விண்மீன்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[20][21][22][23][24][25] மேலும் இதில் குறைந்தபட்சம் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது.[26][27] கதிரவ மண்டலம், பால்வெளி மையத்தில் இருந்து 26,490 (± 100) ஒளியாண்டுகள் தொலைவில், வாயு மற்றும் தூசி ஆகியவற்றின் சுழல் வடிவ செறிவுகளில் ஒன்றான ஓரியன் சுருள்கையின் உள்விளிம்பில் அமைந்துள்ளது. உட்புறத்தில் தோராயமாக 10,000 ஒளியாண்டுகள் வரையில் அமைந்துள்ள விண்மீன்கள் ஒரு வீக்கத்தை உருவாக்குகின்றன. அந்த வீக்கத்தில் இருந்து ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பட்டைகள் கதிர்வீச்சடைகின்றன. பால் வீதி மையத்தில் தனுசு எ* (Sagittarius A) என்று அழைக்கப்படும் செறிந்த கதிர்வீச்சுள்ள மூலம் அமைந்துள்ளது; அது 4.100 (± 0.034) மில்லியனுக்கும் அதிகமான கதிரவ பொருண்மையைக் கொண்ட ஒரு மீப்பெரும் கருந்துளையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *